Type to search

‘நீ தான் காரணம்” : மஹிந்த என்னிடம் வந்து கூறினார் : மீண்டும் மஹிந்தவுடன் பேசத் தயார் என்கிறார் சம்பந்தன்

Breaking News Hot News NEWS Sri Lanka Top Story

‘நீ தான் காரணம்” : மஹிந்த என்னிடம் வந்து கூறினார் : மீண்டும் மஹிந்தவுடன் பேசத் தயார் என்கிறார் சம்பந்தன்

Share
 • 36
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  36
  Shares

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையை முக்கியம் என்றும், பிரிந்து நின்று செயற்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.(mahinda sambanthan)

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகின்றார் ‘ என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“2015 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நானும், ரணிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தோம். எம்மை மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுமாறு மைத்திரி கூறினார்.

பின்னர் நானும் ரணிலும் மஹிந்தவை சந்தித்தோம். இதன்போது மஹிந்த எனது அருகில் வந்து ‘எனது தோல்விக்கு மூலக் காரணம் நீ என்று என்னிடம் கூறினார். அது நானில்லை. எமது மக்கள் தான் காரணம். தமிழ் மக்களின் புறக்கணிக்க முடியாது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றால் தான் ஆட்சிக்கு வரலாம் என்று கூறினேன்.

மஹிந்த ராஜபக்ஷ தற்போது எங்களை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய ஆட்சி காலத்தில் அவரை சந்தித்து எமது அரசியல் தீர்வு தொடர்பாக தெளிவுப்படுத்தி இருந்தோம். ஆனால் அவர் எதனையும் கருத்தில் கொள்ளவில்லை.

ஒருவேளை தற்போது அவர் எமக்கு அரசியல் தீர்வு தர இணக்கம் தெரிவிப்பாராயின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு. அந்த விடயத்தை இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திறுவது மிகப்பொருத்தமானது.

ஒரு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பதாக, அந்த நாட்டில் வாழ்கின்ற வேறுபட்ட மக்கள் மத்தியில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, அந்த தீர்வுகள் ஓர் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்பதாக அவை நடைபெறும்.

ஆனால், துரதிஸ்டவசமாக இலங்கையைப் பொறுத்தவரையில் அவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறவில்லை. நடைபெற்றிருந்தால், 1948 ஆம் ஆண்டு தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும் .

எமக்கு பூரண சுதந்திரம் வேண்டுமென கேட்டோம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சோல்பரி ஆணைக்குழுவிடம் பிராந்திய ஆட்சியைக் கேட்கவில்லை. சமஸ்டியை கேட்கவில்லை. நாங்கள் 50 ற்கு 50 கேட்டோம்.

ஒரே நாட்டுக்குள், பிராந்திய ரீதியாக எந்த அதிகாரத்தையும் கேட்கவில்லை. தமிழ்பேசும் மக்கள் மிகவும் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில் உள்ள சுதந்திரத்தின் அடிப்படையில், இறையாண்மையின் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி தேவை என்பதனை கேட்கவில்லை.

பிராந்திய சுயாட்சி கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினை அப்போது தீர்ந்திருக்கலாம், தீரவில்லை. பிரச்சினை தொடர்கின்றது.

வடக்கு மாகாணத்தில் இன்று குடியேற்றங்கள் இடம்பெறும் சூழலை அவதானிக்கின்றோம். அவை நிறுத்தப்படவேண்டும். பிராந்திய சுயாட்சியுடன், கணிசமான அதிகாரத்தைப் பெற்றிருந்தால், இவை அனைத்தையும் தவிர்த்திருக்க முடியும்.

இன்றைக்கு உள்ள பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எதிர்நோக்க வேண்டும். நாடு முழுவதும் எல்லா மக்களைப் பொறுத்தவரையில், எவ்வாறான விதமாக இவற்றினை அடையப் போகின்றோம்.

அனைத்துலக ரீதியாக, தமிழ் மக்கள் என்ற வகையில், குறிப்பாக வடக்கு, கிழக்கில் எவ்வாறு அணுகப் போகின்றோம். என்பதனை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.

மாகாணங்களும் கூடிய அதிகாரங்களைக் கேட்கின்றார்கள். காணி, சட்டம் மற்றும் ஒழுங்கு அதிகாரம் தமக்குத் தர வேண்டுமென கேட்கின்றார்கள்.

மத்தியின் தலையீடு இருக்க கூடாது, ஆளுனரின் அதிகாரம் இருக்க கூடாது என கேட்கின்றார்கள். ஆளுநர் பதவி வேண்டாமென கேட்டிருக்கின்றார்கள்.

நாங்கள் எவரையும் பகைக்க வேண்டிய அவசியமில்லை. அனைவருடனும் நட்புறவினைப் பேண வேண்டும். நியாயத்தை விளக்க வேண்டும். நீதியை விளக்க வேண்டும்.

ஏனைய நாடுகளில் பல்வேறு கலாசாரங்களுடன் எவ்விதமான ஆட்சி முறையை பின்பற்றுகின்றார்கள் என்பதனை விளக்க வேண்டும்.

எமது நிலைமைகள் தொடர்பாக தென்பகுதி மக்கள் அறிந்து வருகின்றார்கள். தென்பகுதி மக்களை அனைவரும் இனவாதிகள் என கருதக்கூடாது. இனவாதமற்றவர்களும் இருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்களை யாரும் நடத்துவதற்கு இடமளிக்க கூடாது. அது அவசியமான தேவை.

இன்று அரசியலமைப்பை, உருவாக்குவதற்கு முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. அந்த முயற்சியை நடைமுறைப்படுத்தி, நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமானால், அந்த சந்தர்ப்பத்தை இழக்கக் கூடாது.

எமது பங்களிப்பை செய்ய வேண்டும். அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. எமது மக்களுக்கு போதிய பாதுகாப்பு, இறைமை மற்றும் தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய வழி இருக்குமானால், அந்த சந்தர்ப்பத்தை இழக்க கூடாது. அவற்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

அனைத்துலகத்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மக்களின் விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் வெற்றி பெறவில்லை.

அந்த முயற்சியில் நீதி இருந்தது. நியாயம் இருந்தது. அதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்படவில்லை என ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதை அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொண்டது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவி செய்தது.

குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா , கனடா, அவுஸ்தரேலியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவின.

இந்த நாடுகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டார்கள். பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கப்பட்டார்கள். பல விதங்களில் அவர்கள் முடக்கப்பட்டார்கள்.

இந்த அனைத்துலக நாடுகளின் செயற்பாடுகளை கொண்டுதான் சிறிலங்கா அரசாங்கம் அவர்களை தோற்கடித்தது. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு ஒரு வாக்குறுதியை கொடுத்தது. நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்திருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமாக, சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தது.

அவ்விதமான தீர்வுக்கு இன்று பின்நிற்கின்றார்கள். இதை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமக்கு தார்மீக கடமை இருக்கின்றதென்பதனை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

நீதியான நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு அனைத்துலக சமூகத்துக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றதென்பதனை அனைத்துலக சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து தவற முடியாது.

தவறினால், அவர்களின் செயற்பாடு அனைத்துலக ரீதியாக அர்த்தமற்றதாக போய்விடும்.

எமது மக்கள், இந்த நாட்டில் ஏற்படும் ஆட்சி முறை எமக்கு உகந்ததல்ல அவை மாற்றி அமைக்க வேண்டுமென கோரியிருந்தார்கள்.

1960 ஆம் ஆண்டு முதல் எம்மீது ஆட்சி முறை திணிக்கப்பட்டது. எமது ஆதரவுடன் ஆட்சி முறை அமைக்கப்படவில்லை.

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் புறக்கணிக்கும் செயல். அதுதான் அனைத்துலக பிரகடனம். இதை மாற்றி அமைப்பதற்கு அனைத்துலக சமூகம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருமித்து நிற்க வேண்டும். ஒரு தூணாக நிற்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், பல மாற்றங்களை ஏற்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை மூலமாக நாட்டின் ஆட்சி நிர்ணயிக்க கூடியவல்லமை இருக்கின்றது. அந்த நிலைமை தொடர வேண்டும்.

தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை அடைய வேண்டுமாயின் ஒருமித்து செயற்படுவது அவசியம்.

வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டும். வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும், அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையும்.“ என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags:mahinda sambanthan,mahinda sambanthan,mahinda sambanthan,


 • 36
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  36
  Shares
Tags: